கலியுகக் கடவுள் ஸ்ரீஜெகந்நாத்
இந்தியர்களின் நான்கு புனிதத் தலங்கள் திசைக்கொரு கீரிடங்களாகத் திகழ்கின்றன.
வடக்கே பத்ரிநாத், தெற்கே இராமேஸ்வரம், மேற்கே துவாரகநாத், கிழக்கே பூரி ஜெகந்நாத்.
இறைவன் மற்ற ஸ்தலங்களில் குளித்தல், அலங்காரம் செய்தல், தூங்குதல் ஆகிய செயல்களை செய்கிறார். ஆனால் ஆண்டவன் அன்னபோஜனம் ஏற்பது ஜெகந்நாத் பூரியில்தான்.
சத்திய யுகத்தில் நாராயணன் வடிவத்தில் பத்ரிநாத்திலும், துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணன் வடிவத்தில் துவாரகையிலும், திரேதாயுதத்தில் இராமர் வடிவத்தில் இராமேஸ்வரத்திலும் பூஜிக்கப்பட்ட மஹாவிஷ்ணு இந்த கலியுகத்தின் தாருபிரம்ம (மரவிக்ரஹம்) ரூபமாக ஜெகந்நாத் பூரியில் பூஜிக்கப்படுகிறார்.
ஒரிஸாவில் வங்காள விரிகுடா கரையில் அமைந்துள்ளது பூரி ஜெகந்நாத் ஆலயம்.
அதே இறைவன் சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் வரும் கானத்தூரில் கொலு கொண்டிருக்கிறார். இங்கே சொந்தவனத்தில் ஆட்கொண்டிருக்கும் இறைவன் ஜெகந்நாத், நாற்புறமும் இருந்து வரும் நந்தவனக் காற்றை சுகித்தபடியே அண்ணன் பலபத்திரர், தங்கை சுபத்ரா சகிதம் காட்சி தருகிறார். இங்கு 22 படிகளை தாண்டி மேலே சென்றால் வேப்பமரத்தால ஆன தாருபிரம்ம ரூபத்தில் காட்சிதரும் இவர்கள், கலியுகக் கஷ்டங்களைப் போக்க வந்த அவதாரங்கள்.
விநாயகனுக்கு முதல் இடம் இங்கு. காஞ்சி பரமாச்சாரியார் அளித்த காஞ்சி விநாயகரும், பூரியிலிருந்து வந்த பட்டாவிநாயகரும் சேர்ந்தே காட்சி தருகிறார்கள்.
விநாயகனுக்கு அடுத்து, கல்பதரு காட்சி தருகிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூம்மூர்த்திகளின் சொரூபமாக அரசும், வேம்பும், ஆலமரமும் பின்னிப் பிணைந்து கிடக்கும் காட்சி வேறெங்கும் காணமுடியாதது. இந்த மர சங்கமத்தை ஆரத்தழுவி சங்கல்பம் செய்து வந்தால் நம் உடல் உபாதைகளும், உள்ளக்குழப்பங்களும், விலகிப்போய் விடுமாம்.
காசி விஸ்வநாதரும், ஸ்ரீலஷ்மிதேவியும் இங்கு ஸ்தாபிக்கபட்டிருக்கிறார்கள். பூரி ஜெகந்நாத்தின் கோபுரத்திற்கு வலப்பக்கமாக தனி சந்நிதியில் ஸ்ரீவிமலாதேவி வீற்றிருக்கிறார். இறைவன் ஸ்ரீஜெகந்நாதருக்கு படைக்கப்படும் பிரசாதமும், அன்னபோஜனமும் அவருக்கு அடுத்து விமலாதேவிக்கு படைக்கப்படுகிறது. அதன் பின்னரே பக்தர்களுக்கு பிரசாதம் போகிறது.
வழக்கமாக ஒவ்வொரு திசையை பார்த்தபடி இருக்கும் நவகிரக அமைப்பு, இங்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது. நவகிரகங்களுடன் ராகு, கேதுவுக்கும் சிலையமைத்து அவ்வரிசையில் சேர்நதிருக்கிறார்கள்.
ஸ்ரீஜெகந்நாத் கோயில், ஒரிஸா சிற்பக் கலை சாயலில் கட்டப்பட்டிருக்கிறது. விநாயகப் பெருமானின் பல்வேறு தோற்றங்களையும், கிருஷ்ண விஜய காட்சிகளையும், தசாவதார காட்சிகளையும், ஒடிசி நடன காட்சிகளையும் அந்தரத்தில் தெரியும்படி தீட்டியது காது கேட்காத இரு ஊமைச் சகோதரர்கள் என்றால் நம்ப முடியவில்லை.
இந்த ஜெகந்நாத் பகவானுக்கென்றே பிரத்யேகமாக எவர் சில்வரில் செய்யப்பட்ட கியர் சிஸ்டம் கொண்ட தேர் ஒன்றும் இருக்கிறது.
பொதுவாக கடவுள்களுக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களை பிரசாதம் என்கிறோம். ஆனால், ஸ்ரீஜெகந்நாதருக்கு படைக்கப்படுபவை மகாபிரசாதம் எனப்படுகிறது. கொஞ்சமாக சாப்பிடப்படும் பிரசாதம் கைவல்யம் என்றும், வயிறார உண்ணத் தரப்படும் பிரசாதம் மகாபிரசாதம் என்றும் கூறப்படுகிறது.
தாருபிரம்ம ரூபமாக ஸ்ரீஜெகந்நாதர் காட்சி தரும் மர விக்ரஹம் பழுதடைந்தால் புதிதாக படைக்கப்படுகிறது. 5 கிளைகள் கொண்டதும், சங்கு சின்னம் அமைந்ததுமான வேப்பமரத்தினால் பலபத்திரர் படைக்கப்படுகிறார். 7 கிளைகள் கொண்டதும் சக்கர சின்னம் அமைந்ததுமான வேப்பமரத்தில் ஸ்ரீஜெகந்நாத் படைக்கப்படுகிறார். ஸ்ரீஜெகந்நாதர் ஆலயத்திற்குள்ளும் ஒரு வேப்பமரம் தானாக வளர்ந்து நிற்பது அதிசயம்.
ஸ்ரீஜெகந்நாத் பகவானுக்கே செய்யப்படும் பல்வேறு அலங்காரங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது இளமைக்கால அலங்காரம். ஆனி மாதம் வரும் ஸ்நான பவுர்ணமி நாளில் ஸ்ரீஜெகந்நாத் பகவானை ஸ்நானம் செய்விக்கிறார்கள். இந்த ஸ்நான பவுர்ணமிக்குப் பின் 15 நாட்கள் பொதுமக்கள் தரிசனம் கிடையாது. அடுத்த அமாவாசை அன்று ஸ்ரீஜெகந்நாத் பகவானுக்கு இளமை அலங்காரம் செய்யப்படுகிறது. ஸ்நான பவுர்ணமிக்குப் பிறகு ஸ்ரீஜெகந்நாத், பலபத்திரர் மற்றும் சுபத்ராதேவி மூவரும் உடல்நலம் குன்றி விடுகிறார்கள். அமாவாசைக்குள் சிகிச்சைப் பெற்று புதிய இளமைத் தோற்றம் பெறுவதாக செய்யப்படும் சடங்கு இது.
கலியுக கடவுளாக அவதரித்திருக்கும் ஸ்ரீஜெகந்நாத் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வளம் பெறுவோம்.
ஒரிஸா மாநிலத்தில் உள்ள ஜெகந்நாத் கானத்தூருக்கு எப்படி வந்தார்?
பூரி ஸ்ரீஜெகந்நாத்தின் தீவிர பக்தரான எஸ்.என்.மாஜி, சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பூரி ஜெகந்நாதருக்கு சென்னையில் ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் 83ஆம் ஆண்டு தோன்றியதுமே செயலில் இறங்கிவிட்டார். 89ஆம் ஆண்டு கானத்தூர் ரெட்டிக்குப்பத்தில் இடம் வாங்கியது முதல், 2001இல் ஸ்ரீஜெகந்நாதரை ஸ்தாபிக்கும்வரை இவருடைய உழைப்புக்கு ஈடு இணை இல்லை.
No comments:
Post a Comment